Tuesday, December 31, 2013

கண்டு தேடுதலென்பது

கண்டு தேடுதலென்பது 

விடியல் இளங்காலை காலை
உச்சி மதியம் மாலை
முன்னிருட்டு ...வரை
அவளோடு பேசிப்பேசிப்பேசி
தீரவில்லை
இருள் முற்றிய அடர்த்தியில்
குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க
சிரித்து வெடித்து
மின்மினிப் பூச்சியாகி மினுமினுத்தாள்
குவித்த
கையிருட்டில் அவளோடு
பேசிக்கொண்டிருந்தேன்
எனக்கு நானே

விடிய விடிய
வெளிச்சத்தில் கரைந்தாள்

மற்றொரு முன்னிருட்டு இரவாய் முற்ற
மின்மினிக்காக காத்திருந்தேன்
பேசிக்கொண்டிருக்கயிலேயே
குவித்த கையிலிருந்து எகிறிப் பறந்தாள்
மேலே
மேலே மேலே
மேலே மேலே மேலே
மேலே மேலே மேலே மேலே
......
ஒளிர்ந்து சிரிக்கும் நட்சத்திரங்களில்
எது
என் மின்மினி ?

Monday, December 30, 2013

நகர்வு

நகர்வு 

http://www.youtube.com/watch?v=DQyNkyDXNDs

நிலவுக்கும் எனக்கும்
இடையே
நிர்மல வானம்

அசையாமல்

ஒருவருக்கொருவர்
பார்த்துகொண்டு நிற்கிறோம்   
என் கண்களில்
இரு நிலவுகள் மிதக்க.

எங்கிருந்தோ
மெல்லிய மேகப் பிசிறுகள்
எங்களிடையே நீந்திப் போகையில்

நகர்கிறது என் நிலவு
இடைவெளி தூர மாற்றமின்றி




த்யானம்

த்யானம் 

கணுக்கள்
காலத்தின் கணக்கெனத்
தடிக்க
நட்டபுள் நெடிது வளர்ந்தது
பூதங்கள் தின்று
நீர்ச்சுவை ஏற்றி

அடி நுனி சுவைகள்
விலகி நிற்கக் கண்டதெல்லாம்
உண்டவர்க்கே

தன்னில் தனை உணர
தான் வளர்ந்து
நான் ஒறுத்து

தலையில் பச்சைத் தாமரை
தோகை விரிக்க
போகிற போக்கில்
அதைத்
தொட்டுப் போகிறது
ஒரு பட்டாம் பூச்சி


Sunday, December 29, 2013

கவிதைகள்

பளிச்சிட்ட  எண்ணங்களை ,
அகப்பயணங்களின் 
அனுபவங்களைச்
சொல்ல முயன்று

ஆசை காட்டிய சொற்களில்
தரம் அறிந்து தேர்ந்து

நெய்ய

கண்ணுக்கு எட்டி
கைக்கு எட்டா
பனிப்புகையாய் 

குறைந்த பட்ச தோல்விகள்
என் கவிதைகள்


Monday, December 23, 2013

பாய்மரக் கப்பல்

பாய்மரக் கப்பல் 

நட்சத்திரங்கள் 
எவ்வளவு தொலைவில் 
இருந்தாலும் 
எதிரில்தான் இருக்கின்றன 

நீயும் நானும்
பேச நேர்கையில் 

சொல்லத் தவித்ததை 
சொல்லத் தவிர்த்ததை 
சொல்லத் தடுத்ததை 

சொற்களின் துணையின்றி 
பிரயாசைகளற்று 
நாம் 
புரிந்துகொண்டபோது 

தயக்கங்களின் கரைகளிடையே 

பாவனைகள் தோற்று 
ஆறாய் ஓட 
அலைக்கழிப்புகள் ஊடே 
வெற்றிகரமாய் பயணிக்கிறது 
தீரா அன்பின் 
பாய் மறக்கப்பலொன்று 

ஏளனப் புன்னகை 
சிந்திக்கொண்டே 


Friday, December 20, 2013

இலையுதிர்வில்



 இலையுதிர்வில்

 தனை வளர்த்த நிலத்தின்
பின்னமாய் தான் வளர்ந்து
ஒரு
இலையுதிர்வின்
நன்றிக்கடனில்
மண்ணுக்குத் தருதலில்
தன்னை பின்னமாக்கி
முழுமைபெற்று
உயர்ந்து நிற்கும் மரம்
மனிதரின் சிறுமைக்கெதிராய்
அலட்டலின்றி

Friday, November 15, 2013

பனித் துளிகள்

பனித் துளிகள்

ஊகித்து 
முன்கூட்டியே திட்டமிட்டு 
மிகுந்த பிரயாசையுடன் 
தவிர்க்கத்  தீர்மானமாகி இருந்தேன் 

சந்தித்துக் கொள்கையில் 
 அக் கணத்தை சந்திக்கையில்

புல்லின் மேலமர்ந்த பனித்துளியை 
சுண்டி விடுவதைப்போன்ற 
அனாயசத்துடன் 
நீ 
சுண்டிவிடத் 
தெரித்துச் சிதறினேன் 

இன்னும் சிறு பனித் துளிகளாய் 


 


Saturday, July 6, 2013

முடிவதெல்லாம்

எவ்வளவு முயன்றாலும்
பேனாவின் மூடிகளை மறந்துவிடும்
அசிரத்தைகளை

விரட்டமுடிவதில்லை

மூடியற்று கிடக்கும் பேனா முடிதுறந்த அரசனையையும்

பேனாவை இழந்த மூடி
சீவப்பட்டு உருண்ட தலையையும்
போன்ற படிமமாக

சமயத்தில்
அவை
நான்
திட்டமிடக் கையாலாகாதவன்
என்பதை உலகிற்கு உணர்த்திக்கொண்டே
இருப்பதையும் சகிக்க முடிவதில்லை

இப்போதெல்லாம் -

அனாதையான மூடிகளை
ஆதரவற்ற பேனாக்களுடன்
பொருத்தி விடுகிறேன்

நிறம் வடிவம் உள்ளிட்ட
எந்தப் பொருத்தமும் இல்லாவிட்டாலும்

பொருத்தம் பார்க்காதபோது
அவை
பொருந்திப்போகின்றன
என்ற கச்சிதத்தை வியந்து







Wednesday, May 1, 2013

கடலோரம்


கடலோரம் 

உங்கள் அறிவுடைமை 
சமுத்திரத்தின் விஸ்தீரணம் 

என் போதாமைகள் 
நிலத்தின் விஸ்தீரணம் 

புத்தகமொன்றை கையிலெடுக்கையில் 
                                                            காலாற நடக்கிறேன் 
                                                            கடற்கரையில் 
                                                            சிற்றலை சிறுமணல் 
                                                            தழுவ தழுவ  

சுடர்

சுடர்
எங்கிருந்தோ எகிறி வந்து
அமர்ந்தது 
பொறி ஒன்று 
பற்றிக் கொண்டு 

எரிந்தபடி 

மூச்சுக் காற்றில் 

இருள் சூழ அணைக்கையில் 
உறைந்தது ஒன்று 
கரைந்தது ஒன்று  


Wednesday, April 24, 2013

பாம்பு

பாம்பு  

மனக் குடத்தில் 
பதுங்கிச் சுருண்டு 
நெளிந்து 
நெகிழ்ந்து 
பார்வை மகுடி கண்டு 
படமெடுத்து விரியும் 
நேசம் 
இச்சை உடல் குறுக்கிய படியே 

Monday, April 15, 2013

சலனம்

 சலனம் 

அறியும் நொடித்துணுக்கு வரை 
அறைந்து மூடிய அறைக் கதவு 
மனம் -

மூடிய கதவின்
இடைவெளி வழியாய் 
கசியும் ஒளி 

தவிர்க்க 
கண்மூடுகையில் 
காட்சியாய் விரிகிறது 

சன்னமான ஒளி
மனத்தை மூடிய 
திரைச்சீலையை அசைக்க 

சலனம் 

 


Wednesday, April 10, 2013

சிதைவு

சிதைவு  

ஒற்றைக் காலில் வெண் கொக்கு 
கால்  புதைந்த 
நீர்ப் படலத்தில் 
பிம்ப முகம் நோக்கி -

சிறு மீனொன்று கண்டு 
சட்டெனக் கொத்தியபோது 
சிதைந்தது 
முகம்  
உயிர்

Wednesday, March 6, 2013

வர்ண ஜாலம்


கருப்பு வெள்ளை காலத்திற்கு முன்பே
வர்ணங்கள்
தனித்தும் இணைந்தும்
நிறமாலைகள் இருந்ததாம்

புது வர்ணங்கள் வந்தபின்
ஒற்றைநிற ஒளிப் பாய்ச்சலில் 
காணாமல் போயின பழைய வர்ணங்கள் 

எனினும் -

வர்ண விளக்கானாலும்
ஒற்றைநிற விளக்கானாலும்
ஏனோ 
எல்லாப் பொருட்களின் நிழலும்
ஒரே நிறத்தனவாய்





Tuesday, March 5, 2013

இசைக்குறிப்பு

மழை ஓய்ந்த
முன் மாலை ஒன்றில்
இரு மின்சாரக் கம்பங்களின் 
இடையில் மின்கம்பிக் கோடுகளில்
வரிசையாய் 
வெவ்வேறு தினுசாய் அமர்ந்திருக்கும
காக்கைகளை பார்க்கையில்
ஒரு கணம் தெரிகிறது 
இசைக்குறிப்பு 



Wednesday, February 27, 2013

புதின ஓவியம்

என் புதினத்தின்
சில பக்கங்களில்
வந்து போயிருந்த ஒரு
கதா பாத்திரத்தை
வரைந்து கொண்டு வந்து
காட்டினான் வாசகன் 

கற்பனையைக் கடன் வாங்கிக் கொண்டது போல் 
அப்படியே 
நான் நினைத்திருந்தது போலவே
நான் விவரித்திருந்தது போலவே


உயிர்  பெற்ற வரியாய்
உதடசைத்தபடி 
அது பேசியபோது
அதில் ஒன்று கூட
நான்   பேசச் சொன்னது இல்லை





குருவி 

அசையும்  கிளையொன்றில் 
அமர்ந்திருக்கும் குருவி 
அவ்வப்பொழுது 
தன் நேற்றைக்குள்ளும் 
அவ்வப்பொழுது 
தன்  நாளைக்குள்ளும் 
பறந்து மிதந்து 
மீண்டபடியே இருக்கிறது 

ஆனால்  
சிறகில் ஒட்டிய 
சாம்பல்  தூளிகளும் 
சூல் மகரந்தப் பொடிகளுமாய் 
அமர்ந்திருக்கும் அக்குருவி 
அந்த அசையும் கிளைவிட்டு
அகன்றதில்லை 
எப்போதும்