Friday, May 15, 2015

அப்பாலும்


அப்பாலும்
பார்ப்பதற்கு அப்பாலும்

ஏதோ செய்துவிடுகின்றன

சில கண்கள்



முறுவலுக்கு அப்பாலும்

ஏதோ செய்ய முயலுகின்றன

சில புன்னகைகள்



கடந்துபோன பின்னும்

கூட வருகிறார்கள் சிலர்

அல்லது

கூடப் போகிறேன்

உள்ளங்கை வியர்க்க



காற்று வீசுகையில்

உரசித்தொலைக்கின்றன

இலைகள்



எல்லை மீறாதுதான் கடல்

தவிர்த்துத் திரும்பினாலும்

விட்டுத்துரத்தும் கால்சுவடுகள்



எலக்ட்ரானிக் பல்லியென

உச் உச் செனும் கைபேசி

கண்ணை மூடிக்கொள்கையில்

கருநீலம் படரத் தூக்கம்



கடலின் அடியாழத்தில்

கசிந்து உள் நுழைந்த வெயிலின்

கண்கூசா மினுக்கல்



எப்போது துவங்கியது

என்றறியா கணங்களின் நீட்சியில்

அறிந்த குழலிலிருந்து

அறியாத ராகம்



தூக்கத்திலிருந்து விழிப்பிற்கோ

விழிப்பினின்று தூக்கத்திற்கோ

தடுமாறிய கணத்தில்

திரும்பிப் படுத்திருந்தது

பனியன் அணிந்த முதுகு










Wednesday, April 15, 2015

மிருகக் காட்சி சாலையில்
தொலைவில்
மேகம் ஒன்று  படுத்திருந்தது

பின்னேப்போதோ
மாலை வானத்தில்
சிங்கம் ஒன்று
பதிந்திருந்தது

இருவேறு பரவெளிப்
புள்ளிகளை
வெளி நின்று நினைக்கையில்

தூறல் போட
ஆரம்பித்தது


Thursday, December 18, 2014

சீறல்கள்

சீறல்கள்

பூவிதழின்
மடல் அடி நிறமென
விளக்கின்
திரி நுனி மங்கென
மனிதனை மனிதனாகவே
வைத்திருக்கும் பலவீனங்கள்
உலர் நா

ஏரிக்கோடியில் புதர்பரப்பிய
விழல்களின்  ஈர நிழல்களில்
தீண்டல் மறந்துறங்கும்
சர்ப்பங்களை
சீண்டும் சிற்றலைகள்

சுருள் கலைகையில்
எள்ளலாய் சிரிக்கும் சிற்றலைகள் மேல்
சீறி விழும் ஆதிப் பசியுடன்








Saturday, July 26, 2014

ஆசை

ஆசை

பூமி விட்டெழுந்து வான் ஏகும் பறவை
இறகொன்று 
இழிந்திறங்குகிறது
குதூகலமாய்

Friday, May 30, 2014

ஈரச்சுவடுகள்

ஈரச்சுவடுகள் 

முன்னிருட்டு கவியத்தொடங்கும்
குளிர்காலப் பின்மாலை
“முதலாளி முகத்தைப் பார்ப்பாரா” என்ற
ஆவலுடன் பரபரக்கும் பணிப்பெண்
குடும்பப் பெண்ணின் பகுதிநேரப்
பரிதவிப்பாய் -
பங்களிப்பாய் -

சிறிதும் சட்டைசெய்யாதவர் முன்
கைப்பையுடன் நின்று
”கிளம்பட்டா சார்!”

முகம் திருப்பா தலையசைப்பில்
மகிழ்ந்து அவசரமாய் ஓடுகிறாள் படியிறங்கி

கைப்பையில்
காலி டிபன்பாக்ஸில் இரவு உணவைப் பற்றிய நினைவோடும்
காலி வாட்டர்பாட்டிலில் சாயங்காலப் பால் பற்றிய பதைப்போடும்
ஒற்றை சாக்லேட்டில் தனித்துத் தவிக்கும் மகவு பற்றிய வாஞ்சையோடும்
நாடார் கடை கடன் சீட்டில் கணவன் பற்றிய வாடையோடும்
மூலைகள் மடங்கிய வழிபாட்டுப்பாடல் புத்தகத்தில் நம்பிக்கைகளோடும்
கறுப்பு ப்லாஸ்டிக் பையில் சுற்றிவைத்த வலிகளோடும்

மெல்லிருளில் நடந்து கரைகிறாள்

ஈரச்சுவடுகள்  பதித்தபடி




Friday, March 21, 2014

பரி தாபம்

நெகிழ்ந்தலைந்த மகரந்த வாசத்தில்
பரியின் 
நாசி புடைக்க அலைக்கழிந்து
நாபியின் குறுகுறுப்பில்
மண்மூடிப்போன ஆதிகாலப்
பசி
கடிவாளம் உதறி கனைத்தெழுந்து
சுயம் உதறி
வானை எட்டி உதைக்க முயன்று


கொட்டிலைக் கடந்து போகும்
பிருஷ்டத்தில் ஜடை முளைத்தவளை

பின்பாய  முன்பாயும்
மனம்
பரி தாபம்

Wednesday, February 19, 2014

விலாச்சிதறிய குன்றுகள்
காய்ந்த உதடு
நெளியும் நீர்