Tuesday, March 15, 2011

காகம்

ஒரு மின்சாரக் கம்பத்தின்
கீழே
குப்புறக் கிடக்குதொரு காகம்

அண்டவிடாமல்
கரைந்து துரத்துகின்றன
அதன் உறவுகள்

ஓரிருமுறை அலகால் கொத்தி
அசைத்து தோல்வியுறுகிறது
ஒரு காகம்

கொஞ்ச நேரத்தில்
யாருமற்றுக் கிடக்குதந்தக் காகம்
சிறகில் உறைந்த உயிர்

திடுமென்று கிளம்பிய
மெல்லிய காற்றொன்று
போகிற போக்கில்
அதன் சிறகுகளை சிலுப்பி
அசைத்துவிட்டுப் போகிறது



Monday, March 14, 2011

சிலந்தி



மூடப்படாத 
என் வீட்டு முன் வாசல் 
கதவு 

யாரும் வரலாம்
யாரும் போகலாம்
ஆனால்
யாரும் வரவில்லை
யாரும் போகவில்லை

நானே கூட

கதவு மட்டும் எப்போதாவது
உள்ளே வருவதும்
வெளியே போவதுமாய்
அசைந்தபடி அங்கேயே நிற்கிறது   

கால காலமாய்
மண்டையுள்  தொங்கும்
சிலந்தி