Friday, March 20, 2009

கவிதை

என்
எழுதப்பட்ட வரிகளுக்கு இடையே உள்ள
எழுதப்படாத வரிகளில் இருக்கிறது
எனது உண்மையான கவிதை

தோழி

ஒரு கனவின் மிதப்பில் வராது போனாலும்

ஒரு குதூகலத்தின் உச்சியில்மறந்துபோனாலும்

ஒரு சுகத்தின் நெகிழ்வில் நிற்காது போனாலும்

ஒரு சுவையின் விளிம்பில் தவழாது போனாலும்

ஒரு செருக்கின் நுனியில் ஆடாமல் போனாலும்

ஒரு வெற்றியின் முடிவில் தவழாது போனாலும்

என் வலியின் போது பொறுமையாகவும்

என் காயத்தின் போது வலிமையாகவும்

என் சோர்வின்போது வருடலாகவும்

என் இமைகள் நனையும்போது தென்றலாகவும்

ஒரு முறை கூட தவறாது வரும்

நீதான் இந்த சுய நல வாதியின்

என் உயிர்த்தோழி

ஒன்றிலொன்று

உண்மையைப் பொய்யில்

சுருட்டி வைக்க முடியுமா?

தீயைப் பூவில்

அடக்கி வைக்க முடியுமா?

காற்றை நீரில்

பதுக்கிவைக்க முடியுமா?

நீரை நிலத்தில்

புகுத்தி வைக்க முடியுமா?

என்னை என்னில்

புதைத்து வைக்க முடியுமா?

இருத்தல்

எதுவும் இல்லை

என்றாலும்

எதுவும் இல்லை என்று ஒன்று

இருக்கிறதே!

குரல்

என்னைக் கூப்பிட்டமாதிரி இருந்ததே

கூப்பிட்டயா?

இல்லையே..

நிச்சயம் கூப்பிட்டமாதிரிதான் இருந்தது

நானில்லை. வேறு யாராவதாக இருக்கலாம்

இல்லை. உன் குரல்தான் அது

அப்படியெனில் குரல் என்னுடையதாகவும்

அழைப்பு உன்னுடயதாகவும்

இருந்திருக்கலாம்.