Friday, May 15, 2015

அப்பாலும்


அப்பாலும்
பார்ப்பதற்கு அப்பாலும்

ஏதோ செய்துவிடுகின்றன

சில கண்கள்



முறுவலுக்கு அப்பாலும்

ஏதோ செய்ய முயலுகின்றன

சில புன்னகைகள்



கடந்துபோன பின்னும்

கூட வருகிறார்கள் சிலர்

அல்லது

கூடப் போகிறேன்

உள்ளங்கை வியர்க்க



காற்று வீசுகையில்

உரசித்தொலைக்கின்றன

இலைகள்



எல்லை மீறாதுதான் கடல்

தவிர்த்துத் திரும்பினாலும்

விட்டுத்துரத்தும் கால்சுவடுகள்



எலக்ட்ரானிக் பல்லியென

உச் உச் செனும் கைபேசி

கண்ணை மூடிக்கொள்கையில்

கருநீலம் படரத் தூக்கம்



கடலின் அடியாழத்தில்

கசிந்து உள் நுழைந்த வெயிலின்

கண்கூசா மினுக்கல்



எப்போது துவங்கியது

என்றறியா கணங்களின் நீட்சியில்

அறிந்த குழலிலிருந்து

அறியாத ராகம்



தூக்கத்திலிருந்து விழிப்பிற்கோ

விழிப்பினின்று தூக்கத்திற்கோ

தடுமாறிய கணத்தில்

திரும்பிப் படுத்திருந்தது

பனியன் அணிந்த முதுகு










Wednesday, April 15, 2015

மிருகக் காட்சி சாலையில்
தொலைவில்
மேகம் ஒன்று  படுத்திருந்தது

பின்னேப்போதோ
மாலை வானத்தில்
சிங்கம் ஒன்று
பதிந்திருந்தது

இருவேறு பரவெளிப்
புள்ளிகளை
வெளி நின்று நினைக்கையில்

தூறல் போட
ஆரம்பித்தது