Friday, October 19, 2012

இன்னும் பறந்து கொண்டிருக்கும் பறவை





மீன்கொத்தி  ஒன்று
அமைதி சலசலத்த
நீர்ப் பரப்பின்மேல் அந்தரத் தொங்கலாய்

ஒரு கணத்தின் துணுக்கில்
நேர்க்குத்தாய் வீழ்ந்த கல்லென
'பளக்' கென்று மீன் கொத்திப் போனது

மற்றொரு முறை
அந்த கணத்திற்காக காத்திருந்து 
உயர் ரக காமிராவில் படம் பிடித்து வைத்துப்
பார்த்தேன். 

மீண்டும் மீண்டும் அதைப் பார்த்தேன்

பின் 
ஒரு ஞாயமான நொடியில் 
பதிவு செய்த இயற்கை
பார்த்து ரசித்த இயற்க்கைக்கு செய்யும்
அவமரியாதை என உணர்ந்து

அழித்தேன் 


Tuesday, October 16, 2012

ஒளி வண்டு

நெடுக்கை உலகின் உணர்வொழிந்து
கிடக்கை உலகின் உணர்வெழுந்து
படுக்கை
பின் மிதக்க மறக்க -

கனவின் நிழலில் தெளிந்தவை
நனவின் ஒளியில் உருமறைய
கனவை மீட்கப் போராட்டம்
அமிழ்ந்தும் எழுந்தும் மிதந்தும்

ஓடம் செலுத்திப் போகையில்
சிவந்து தவிக்கும் நீரில்
பச்சைத் தாமரை
காற்றில் நூலாடும் ஒளிவண்டு
ங்கொய் ய் ய் ய்
பிறிதொரு தாமரை கண்ணுற
ஒளிவண்டு
ஒரு வண்டா ? ஒரே வண்டா ?
இரு மலர்களை ஒரே சமயம்
கண்ணுற இயலா ஓடப் பயணத் தவிப்பில்
கலைந்த கனவு 
சிவப்பாய்க் கவிந்த இருளில்
காட்சிகள் மறைந்து
காதில்  ங்கொய் ய் ய் ய்




Monday, October 15, 2012

சொல்லம்பு

பரம்பரையின்
கால வெள்ளத்தில் மூழ்கி
எண்ணச் சேற்றில் புதைந்து
நினைவுகளில் அரிப்பில் சிதைந்து
முனை மழுங்கி
துருவேறிக் கிடந்த  அம்பொன்றை

யதேச்சையாக வீசியபோது

தனது சிருஷ்டி புதுக் கருக்கில்
தைத்தது போலவே
தைத்தது
சொல்லம்பு 


கேள்விகள்

விடக்கூடாது.

கேட்டுவிடவேண்டும்  என்று
தொண்டையில் சேமித்த கேள்விகள்
சிக்கிக் கொண்டன சமயம்  வாய்த்த போது

மறுமுறை - தயாராக வைத்திருந்து
வீசக் காத்திருந்தபோது
எதிர்கொள்ளும் மன நிலையில் அவர் இல்லை

இன்னொருமுறை சமயம் வாய்த்தபோது
ஏனோ கேட்க இஷ்டமில்லை

மற்றொரு முறை
எல்லாம் சரியாக அமைந்திருந்தது
ஆனால் அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது


நான் கேட்கவிருந்த  கேள்விகளுக்கான
அவருடைய பதில்
என்னிடமே இருந்தது என்பதை
ஏதோ ஒரு கணத்தில்  அறிந்த போது 
குழப்பாக இருந்தது

நான் கேட்க விரும்பியவை
யாரிடம் ?