Thursday, December 17, 2009

அநித்திய சுகம்

கம்பிக் கதவைத் தாண்டி

கொத்திஎடுத்து எடையிட்டபோது
கூடவோ குறையவோ இருந்திருக்கவேண்டும்

அதை தரையில் வீசிவிட்டு வேறொன்றை தேட
கழுத்து முறிவினின்று

கணதூரத்தில் தப்பிய சேவல்

கூட்டத்தில் கலந்து, கூட்டம் கலைத்து

பேடை துரத்திச் சிலிர்த்து

சிறகு பரப்பிச் சீறிப் புணர்ந்து

மறுபடி இரை கொத்தச் செல்லும்

சாவதானம்

எதுவும் அறியாமலா?

எல்லாவற்றையும் அறிந்தா?

Thursday, October 1, 2009

இரை

பசிக்குப் புசி

பசிக்கப் பசிக்க
புசிக்க
புசிக்கப் புசிக்கப்
பசிக்க

தின்பது நீயோ நானோ

தீனியாவது
நீயும் நானும்.

Wednesday, September 16, 2009

என் சொல்ல

என் எண்ணத்தை அவனால் படிக்கமுடிகிறது
என்பதையும்
என் நினைப்பை அவனால் ஊகிக்கமுடிகிறது
என்பதையும்
என் நினைவை அவனால் இசைக்கமுடிகிறது
என்பதையும்
என் சலனங்களை அவனால் குறிப்பறியமுடிகிறது
என்பதையும்
என் பழைய சின்ன ஆசைகளை புதுப்பித்துக்கொள்ளும் நினைவு
என்பதையும்
அவனறிவதை நானறியும்போதும்
நானறிவதை அவனறியும்போதும்

இதுவரை துணைக்குவந்த வார்த்தைகள்
ஊமையாகி நிற்கின்றன

அப்போது துலங்குகின்றன
பழகிய வார்த்தைகளில்
பகிர விரும்பும் படிமங்கள்

அசையும் உயிர்கள்

சாலையோரம்
நசுங்கி ஒதுங்கிய மானிடன்
விறைத்த உடல்
உறைந்த விழி
அதில் அசையும்
உயிர்த்த முகங்கள்
கூடி நின்று பார்ப்போரின்
உயிர்த்த முகங்கள்

Tuesday, May 26, 2009

உறக்கம்

எரியாவிடினும் அவை
தீக்குச்சிகள்தான்
எனது
நம்பிக்கைகளைப்போல

எரிந்தபின்னரும் அவை
எரிந்த
தீக்குச்சிகள்தான்
எனது
தீர்மானங்களைப்போல.

Wednesday, April 22, 2009

அடி

அடிப்பது போல சாட்டையை
சொடக்கினேன்
அடிக்காமல்.

வலித்ததுபோல் துடித்து
அழுதாய்
வலிக்காமல்.

பழகிப்போனோம்.

ஆனால்
எப்போது அடிக்கிறேன் என்று
எனக்கும் தெரியவில்லை
எப்போது வலிக்கிறது என்று
உனக்கும் தெரியவில்லை.
எது அடி எது வலி என்றும்
எவருக்கும் தெரிவதில்லை.


















k

Friday, April 10, 2009

இரவல்

யதேச்சையான

ஒரு சந்திப்பின் நீளம் சிநேகம்

எதிர்பாராத ஆனால் காத்துக்கொண்டிருந்த

ஒரு சந்திப்பின்போது

பேச்சின் நெருக்கத்தில்

என்னில் குரங்கொன்று விழித்துக்கொண்டது சப்தமின்றி

பேச்சின் மீது வைத்த தக்கையை கவனித்தபடி

அப்போது தெரிந்தது

அவளும் மறைக்க முயன்றுகொண்டிருந்த அவளுடைய குரங்கு

மௌனத்தினால் ஒரு மதில் .

மிருதுவான கணம் ஒன்றில் இரவல் கேட்க ஆசை

இரவல் தரும் ஆசையும் வெளிப்பட,

மதில் ஏறி குதித்தது ஒரு பூனை ஓசையின்றி

இரவலாக பரிமாறிக்கொள்ள விழைந்தபோது

ஒரு பிசகிய கணத்தில்

சட்டென கைநழுவி பட்டென உடைந்து தெறித்தது

சுதாரித்து பின்

காயம் படாமல் பொறுக்கிக்கொண்டிருந்தோம் சில்லுகளை

இன்னும் பூனையை விரட்டாமலேயே

Friday, March 20, 2009

கவிதை

என்
எழுதப்பட்ட வரிகளுக்கு இடையே உள்ள
எழுதப்படாத வரிகளில் இருக்கிறது
எனது உண்மையான கவிதை

தோழி

ஒரு கனவின் மிதப்பில் வராது போனாலும்

ஒரு குதூகலத்தின் உச்சியில்மறந்துபோனாலும்

ஒரு சுகத்தின் நெகிழ்வில் நிற்காது போனாலும்

ஒரு சுவையின் விளிம்பில் தவழாது போனாலும்

ஒரு செருக்கின் நுனியில் ஆடாமல் போனாலும்

ஒரு வெற்றியின் முடிவில் தவழாது போனாலும்

என் வலியின் போது பொறுமையாகவும்

என் காயத்தின் போது வலிமையாகவும்

என் சோர்வின்போது வருடலாகவும்

என் இமைகள் நனையும்போது தென்றலாகவும்

ஒரு முறை கூட தவறாது வரும்

நீதான் இந்த சுய நல வாதியின்

என் உயிர்த்தோழி

ஒன்றிலொன்று

உண்மையைப் பொய்யில்

சுருட்டி வைக்க முடியுமா?

தீயைப் பூவில்

அடக்கி வைக்க முடியுமா?

காற்றை நீரில்

பதுக்கிவைக்க முடியுமா?

நீரை நிலத்தில்

புகுத்தி வைக்க முடியுமா?

என்னை என்னில்

புதைத்து வைக்க முடியுமா?

இருத்தல்

எதுவும் இல்லை

என்றாலும்

எதுவும் இல்லை என்று ஒன்று

இருக்கிறதே!

குரல்

என்னைக் கூப்பிட்டமாதிரி இருந்ததே

கூப்பிட்டயா?

இல்லையே..

நிச்சயம் கூப்பிட்டமாதிரிதான் இருந்தது

நானில்லை. வேறு யாராவதாக இருக்கலாம்

இல்லை. உன் குரல்தான் அது

அப்படியெனில் குரல் என்னுடையதாகவும்

அழைப்பு உன்னுடயதாகவும்

இருந்திருக்கலாம்.

Saturday, February 7, 2009

மனித மரம்

என் மீது விழும் அட்சதைகள்
விதைகள்
என் மீது விழும் சேறுகள்
உரங்கள்
என் மீது உமிழப்படும் காற்று
உயிர்க்காற்று
என் மீது எறியப்படும் அம்புகள்
என் வேலிகள்
நான் வீசப்படும் மூலை
என் விளைநிலம்
என்றும்
என் கனிகள் எல்லோருக்கும்தான்
ஏன் என்றால்
நான் மரமனிதன் அல்ல
இறைவன் சந்நிதியில்
மனித மரம் . மனம்.