Tuesday, December 31, 2013

கண்டு தேடுதலென்பது

கண்டு தேடுதலென்பது 

விடியல் இளங்காலை காலை
உச்சி மதியம் மாலை
முன்னிருட்டு ...வரை
அவளோடு பேசிப்பேசிப்பேசி
தீரவில்லை
இருள் முற்றிய அடர்த்தியில்
குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க
சிரித்து வெடித்து
மின்மினிப் பூச்சியாகி மினுமினுத்தாள்
குவித்த
கையிருட்டில் அவளோடு
பேசிக்கொண்டிருந்தேன்
எனக்கு நானே

விடிய விடிய
வெளிச்சத்தில் கரைந்தாள்

மற்றொரு முன்னிருட்டு இரவாய் முற்ற
மின்மினிக்காக காத்திருந்தேன்
பேசிக்கொண்டிருக்கயிலேயே
குவித்த கையிலிருந்து எகிறிப் பறந்தாள்
மேலே
மேலே மேலே
மேலே மேலே மேலே
மேலே மேலே மேலே மேலே
......
ஒளிர்ந்து சிரிக்கும் நட்சத்திரங்களில்
எது
என் மின்மினி ?

Monday, December 30, 2013

நகர்வு

நகர்வு 

http://www.youtube.com/watch?v=DQyNkyDXNDs

நிலவுக்கும் எனக்கும்
இடையே
நிர்மல வானம்

அசையாமல்

ஒருவருக்கொருவர்
பார்த்துகொண்டு நிற்கிறோம்   
என் கண்களில்
இரு நிலவுகள் மிதக்க.

எங்கிருந்தோ
மெல்லிய மேகப் பிசிறுகள்
எங்களிடையே நீந்திப் போகையில்

நகர்கிறது என் நிலவு
இடைவெளி தூர மாற்றமின்றி




த்யானம்

த்யானம் 

கணுக்கள்
காலத்தின் கணக்கெனத்
தடிக்க
நட்டபுள் நெடிது வளர்ந்தது
பூதங்கள் தின்று
நீர்ச்சுவை ஏற்றி

அடி நுனி சுவைகள்
விலகி நிற்கக் கண்டதெல்லாம்
உண்டவர்க்கே

தன்னில் தனை உணர
தான் வளர்ந்து
நான் ஒறுத்து

தலையில் பச்சைத் தாமரை
தோகை விரிக்க
போகிற போக்கில்
அதைத்
தொட்டுப் போகிறது
ஒரு பட்டாம் பூச்சி


Sunday, December 29, 2013

கவிதைகள்

பளிச்சிட்ட  எண்ணங்களை ,
அகப்பயணங்களின் 
அனுபவங்களைச்
சொல்ல முயன்று

ஆசை காட்டிய சொற்களில்
தரம் அறிந்து தேர்ந்து

நெய்ய

கண்ணுக்கு எட்டி
கைக்கு எட்டா
பனிப்புகையாய் 

குறைந்த பட்ச தோல்விகள்
என் கவிதைகள்


Monday, December 23, 2013

பாய்மரக் கப்பல்

பாய்மரக் கப்பல் 

நட்சத்திரங்கள் 
எவ்வளவு தொலைவில் 
இருந்தாலும் 
எதிரில்தான் இருக்கின்றன 

நீயும் நானும்
பேச நேர்கையில் 

சொல்லத் தவித்ததை 
சொல்லத் தவிர்த்ததை 
சொல்லத் தடுத்ததை 

சொற்களின் துணையின்றி 
பிரயாசைகளற்று 
நாம் 
புரிந்துகொண்டபோது 

தயக்கங்களின் கரைகளிடையே 

பாவனைகள் தோற்று 
ஆறாய் ஓட 
அலைக்கழிப்புகள் ஊடே 
வெற்றிகரமாய் பயணிக்கிறது 
தீரா அன்பின் 
பாய் மறக்கப்பலொன்று 

ஏளனப் புன்னகை 
சிந்திக்கொண்டே 


Friday, December 20, 2013

இலையுதிர்வில்



 இலையுதிர்வில்

 தனை வளர்த்த நிலத்தின்
பின்னமாய் தான் வளர்ந்து
ஒரு
இலையுதிர்வின்
நன்றிக்கடனில்
மண்ணுக்குத் தருதலில்
தன்னை பின்னமாக்கி
முழுமைபெற்று
உயர்ந்து நிற்கும் மரம்
மனிதரின் சிறுமைக்கெதிராய்
அலட்டலின்றி