Friday, September 30, 2011

படர்க்கையின் திணறல்

இருவர்க்கு
மூன்றாமவராய் இருக்கும் 
படர்க்கையின் திணறல்

இரு சர்பங்களின் ஆதி மொழிக்கு
பதவுரை எது? 
ஏது?
அசைவின் ஒலிமொழியில்

அவரவர் 
தத்தம் பொற் குணங்களை உரசி ருசுப்பிக்க 
ரணப் பொன் மின்னும் உரைகல் 


Sunday, September 4, 2011

இல்லாதது

இல்லாதது என்ற சொல்
எளிமை தாண்டியது


இருந்து இல்லாமல் போவது
இருந்தும் இல்லாமல் போவது
இல்லாமலே இல்லாததாகிப் போவது
இல்லாமல் இருப்பது
தெரியாததால் இல்லததாகிப் போவது
தெரிந்தும் மறுத்தலால் இல்லைஎன்றாவது
இவற்றுள் சொல்ல அடங்காதது என
இத்தனை இருக்கிறது இல்லாததைப் பற்றி !













சாகா வார்த்தைகள்

சில பழையதாயும்
சில புதிதாய் சேர்த்தும்
விரல் கணுக்களில் தட்டி சோதித்து
கவிழ்த்து வைக்கப்பட்ட பானைகள்
தலைமுறை களாய்

கைதவறியோ
அவசர  எலி உருட்டியோ
ஆவேசப் பூனை உருட்டியோ
சரிந்தன சில்லோடுகளாய்
ஆளுக்கொரு சில் லெடுத்து அவரவர் 
வீசியது போக 

காலம் சிதைத்த பாழ் குளத்தில் 
எதேச்சையாய் எடுத்து வீசும்போதும் 
அது வீசும் அலைகள்
வார்த்தைகளென தைத்து விரியும்

குளத்தரை அடிச் சகதியிலும்
அம்பெனப் புதைந்து 
காத்துக் கிடக்கும் தூர் வாரும் தினம் நோக்கி
சாவற்ற
சாகடிக்கும் வார்த்தைகள்    
 



   




    
 

அவன்

அவனை 
புத்திசாலி என்றெண்ணும் முட்டாள்களுக்கு
நிறை வார்த்தைகளில்
நீவிக் கொடுக்கிறான்.

அவனை 
முட்டாளென் றெண்ணும் 
புத்திசாலிகளிடம்
பட்ட காயத்தை நக்கிக் கொள்கிறான்

அவனை
புத்திசாலி என்றெண்ணும்
புத்திசாளிகளுடன்
மெளனமாக கைகுலுக்கி
முறுவலிக்கிறான்.

அவனை 
முட்டாளென் றெண்ணும் 
முட்டாள்களிடம்
சேர்ந்து மகிழ்ந்து சந்தோஷிக்கிறான் 

என்னே
சந்தோஷகரமான
சந்தோஷமயமான
வாழ்விது!