Friday, May 30, 2014

ஈரச்சுவடுகள்

ஈரச்சுவடுகள் 

முன்னிருட்டு கவியத்தொடங்கும்
குளிர்காலப் பின்மாலை
“முதலாளி முகத்தைப் பார்ப்பாரா” என்ற
ஆவலுடன் பரபரக்கும் பணிப்பெண்
குடும்பப் பெண்ணின் பகுதிநேரப்
பரிதவிப்பாய் -
பங்களிப்பாய் -

சிறிதும் சட்டைசெய்யாதவர் முன்
கைப்பையுடன் நின்று
”கிளம்பட்டா சார்!”

முகம் திருப்பா தலையசைப்பில்
மகிழ்ந்து அவசரமாய் ஓடுகிறாள் படியிறங்கி

கைப்பையில்
காலி டிபன்பாக்ஸில் இரவு உணவைப் பற்றிய நினைவோடும்
காலி வாட்டர்பாட்டிலில் சாயங்காலப் பால் பற்றிய பதைப்போடும்
ஒற்றை சாக்லேட்டில் தனித்துத் தவிக்கும் மகவு பற்றிய வாஞ்சையோடும்
நாடார் கடை கடன் சீட்டில் கணவன் பற்றிய வாடையோடும்
மூலைகள் மடங்கிய வழிபாட்டுப்பாடல் புத்தகத்தில் நம்பிக்கைகளோடும்
கறுப்பு ப்லாஸ்டிக் பையில் சுற்றிவைத்த வலிகளோடும்

மெல்லிருளில் நடந்து கரைகிறாள்

ஈரச்சுவடுகள்  பதித்தபடி