Thursday, December 29, 2011

தவிர்க்க முடியாத எதேச்சை

சிக்னலுக்கு காத்திருக்கும்
பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் இருந்து
மிக அருகில் வந்து நிற்கும் அடுத்த பேருந்தின்
ஜன்னலோர பிரயாணியை பார்ப்பதும் -

நிலைக்கண்ணாடி ஒன்றினைக் கடக்கும்போது
தன் முழு பிம்பத்தை காண்பதோ
முடிக்கற்றையை சரிசெய்து கொள்வதோ -

வாசகம் பதித்த 
இறுக்கமான மேலுடையில்
கடந்து சென்ற பெண்ணின்
முகம் நினைவுக்கு வராததும் -

பின்னிரவு வேளையில்
பேருந்து நிலைய சுவரோரமாய்
தனியாக நிற்கும் பெண்ணின்
முகத்தை நேராக பார்க்க முயல்வதும் -

கொளுத்தும் வெய்யிலில்
கைக்குழந்தைப் பிச்சைக்காரியின்
குழந்தையைப் பார்க்காமல்
கைகளை மட்டும் பார்த்து காசு இடுவதும் -    


தவிர்க்க முடியாத எதேச்சைகளாவது

எல்லோருக்கும்தனா?   

 

 

 

Friday, December 16, 2011

ஒற்றைக்கதவு

ஆள் நடமாட்டமற்ற வெளியில்
லேசாகத் திறந்தபடி
மூடி இருக்கிறது
அந்த
ஓரறையின் ஒற்றைக்கதவு
ரகசியமொன்றின் கசிவைப் போல.

சந்தேகமே இல்லை

உள்ளிருக்கும் இருவர்
சந்தேகத்தைத் தவிர்க்க
அப்படி செய்திருக்கலாம்
சந்தேகச் சிறகுகள் முளைத்துக்கொள்ள

ஒரு சமயத்தில்
கதவு மிக மெதுவாக மூடப்பட
முளைத்த சிறகுகள் படபடத்தன
சற்று நேரத்திற்குப் பின்
அக் கதவு 
அகலமாய்த் திறந்து கொண்டது

அதேதான். சந்தேகமில்லை. 

அவ்விருவரும் வெளியே வரக்
காத்திருந்து -
பின்
சட்டென உள்நுழைந்து அவர்களுக்கு
அதிர்ச்சி தரலாம் என
சரேலென உள்நுழைந்தபோது
அதிர்ச்சியுடன்  வரவேற்றது
ஆட்களற்ற அறை

காற்றின் சூழ்ச்சி
         
   

Sunday, December 11, 2011

முரசு

பின்னழகில்
பின்னலழகில்
இரட்டின் முரசில்
மோதும் ஒற்றைக் கொம்பில்
அதிர்ந்தது

மனம்  


Friday, September 30, 2011

படர்க்கையின் திணறல்

இருவர்க்கு
மூன்றாமவராய் இருக்கும் 
படர்க்கையின் திணறல்

இரு சர்பங்களின் ஆதி மொழிக்கு
பதவுரை எது? 
ஏது?
அசைவின் ஒலிமொழியில்

அவரவர் 
தத்தம் பொற் குணங்களை உரசி ருசுப்பிக்க 
ரணப் பொன் மின்னும் உரைகல் 


Sunday, September 4, 2011

இல்லாதது

இல்லாதது என்ற சொல்
எளிமை தாண்டியது


இருந்து இல்லாமல் போவது
இருந்தும் இல்லாமல் போவது
இல்லாமலே இல்லாததாகிப் போவது
இல்லாமல் இருப்பது
தெரியாததால் இல்லததாகிப் போவது
தெரிந்தும் மறுத்தலால் இல்லைஎன்றாவது
இவற்றுள் சொல்ல அடங்காதது என
இத்தனை இருக்கிறது இல்லாததைப் பற்றி !













சாகா வார்த்தைகள்

சில பழையதாயும்
சில புதிதாய் சேர்த்தும்
விரல் கணுக்களில் தட்டி சோதித்து
கவிழ்த்து வைக்கப்பட்ட பானைகள்
தலைமுறை களாய்

கைதவறியோ
அவசர  எலி உருட்டியோ
ஆவேசப் பூனை உருட்டியோ
சரிந்தன சில்லோடுகளாய்
ஆளுக்கொரு சில் லெடுத்து அவரவர் 
வீசியது போக 

காலம் சிதைத்த பாழ் குளத்தில் 
எதேச்சையாய் எடுத்து வீசும்போதும் 
அது வீசும் அலைகள்
வார்த்தைகளென தைத்து விரியும்

குளத்தரை அடிச் சகதியிலும்
அம்பெனப் புதைந்து 
காத்துக் கிடக்கும் தூர் வாரும் தினம் நோக்கி
சாவற்ற
சாகடிக்கும் வார்த்தைகள்    
 



   




    
 

அவன்

அவனை 
புத்திசாலி என்றெண்ணும் முட்டாள்களுக்கு
நிறை வார்த்தைகளில்
நீவிக் கொடுக்கிறான்.

அவனை 
முட்டாளென் றெண்ணும் 
புத்திசாலிகளிடம்
பட்ட காயத்தை நக்கிக் கொள்கிறான்

அவனை
புத்திசாலி என்றெண்ணும்
புத்திசாளிகளுடன்
மெளனமாக கைகுலுக்கி
முறுவலிக்கிறான்.

அவனை 
முட்டாளென் றெண்ணும் 
முட்டாள்களிடம்
சேர்ந்து மகிழ்ந்து சந்தோஷிக்கிறான் 

என்னே
சந்தோஷகரமான
சந்தோஷமயமான
வாழ்விது!      



Tuesday, March 15, 2011

காகம்

ஒரு மின்சாரக் கம்பத்தின்
கீழே
குப்புறக் கிடக்குதொரு காகம்

அண்டவிடாமல்
கரைந்து துரத்துகின்றன
அதன் உறவுகள்

ஓரிருமுறை அலகால் கொத்தி
அசைத்து தோல்வியுறுகிறது
ஒரு காகம்

கொஞ்ச நேரத்தில்
யாருமற்றுக் கிடக்குதந்தக் காகம்
சிறகில் உறைந்த உயிர்

திடுமென்று கிளம்பிய
மெல்லிய காற்றொன்று
போகிற போக்கில்
அதன் சிறகுகளை சிலுப்பி
அசைத்துவிட்டுப் போகிறது



Monday, March 14, 2011

சிலந்தி



மூடப்படாத 
என் வீட்டு முன் வாசல் 
கதவு 

யாரும் வரலாம்
யாரும் போகலாம்
ஆனால்
யாரும் வரவில்லை
யாரும் போகவில்லை

நானே கூட

கதவு மட்டும் எப்போதாவது
உள்ளே வருவதும்
வெளியே போவதுமாய்
அசைந்தபடி அங்கேயே நிற்கிறது   

கால காலமாய்
மண்டையுள்  தொங்கும்
சிலந்தி  


        

Tuesday, February 22, 2011

மீட்பு

மீட்பு

வரிசையிலிருந்து வழுக்கி
கண்ணுக்குள்ளேயே விழுந்துவிட்ட  இமை  

வாயிலிருந்து தப்பி
வாழ்க்கைக்குள்ளேயே விழுந்துவிட்ட சொல்

இரண்டையுமே

கண்ணீரோடுதான்  துடைத்தெடுக்க முடிகிறது

Thursday, January 20, 2011

நினைவு ருசி

நேர்ந்த பயணத்தின்
நினைவு ருசிகள் பல
உலகின் பருவச் சுழற்சி

கிழித்து கசக்கி கையில் திணிக்கப்பட்ட
பேருந்துச் சீட்டு போல
அதிபத்திரமும்
அதி முக்கியத்துவமும்
பெற்று விடுகின்றன 

எதுவரையோ அதுவரை