Thursday, September 23, 2010

சுழற்சி

உணவில் சாகிறது பசி
பசியில் சாகிறது  உணவுருசி

உணர்ச்சியில் சாகிறது அறிவு
அறிவில் சாகிறது உணர்ச்சி

உவப்பில் சாகிறது கவலை
கவலையில் சாகிறது உவப்பு 

இருட்டில் சாகிறது பகல்
பகலில் சாகிறது இருட்டு

அத்தனையும் செத்துப் பிழைக்க
சாகாதும் பிழைக்காதும்  இருப்பது



நீயும் நானும்

இடைவெளி

வைத்த இடத்திலேயே
வைத்தபடி இருக்கும்பொருட்களுக்கும்
அதன் கலைப்புகளுக்கும் இடையே -

எழுதிய பக்கங்கள்
எழுதிய படியே இருப்பதற்கும்
அதில் ததும்பும் கிறுக்கல்கிளுக்கும் இடையே -

குடிநீர்க் குடம்
சுத்தமாக இருப்பதற்கும்
கை இடக் கலங்குவதர்க்கும் இடையே -

ஒரு துடைப்பம்
கச்சிதமாக இருப்பதற்கும்
குச்சிகள் சிதற கலைந்து இருப்பதற்கும் இடையே -

ஒரு தூக்கம்
முழுமையாக சுவைக்கப் படுவதற்கும்
அடிக்கடி கலைக்கப் படுவதற்கும் இடையே

ஆம். நீங்கள் நினைப்பது சரிதான் !

மாயச் சிறகென எழில் நலுங்குகிறது
ஒரு குழந்தையின் வருகை

நோதல்

மனம் மரத்தவனின்
மரணத்தின் மிச்சத்தை
வாழ்ந்து கழிக்கிறாள் அவன் விதவை

அதை விடக் கொடுமை

அவன் வாழ்க்கையின் எச்சத்தை
அவனோடு மரணித்து வாழ்ந்தது .

சாதல் சுலபம் நோதலை விட

நாயின் ரணங்கள்

காலிலோ
உடலிலோ பட்ட ரணங்களை
நக்கி நக்கி ஆற்றிக்கொள்ளும் நாய்
கண்ணில் பட்ட ரணத்தை
காற்றில் ஆற்றிக்கொள்ள
அலையால் அலைந்தழிகிறது.
வரிசையிலிருந்து வழுக்கி
கண்ணுக்குள்ளேயே விழுந்துவிட்ட  இமை  
வாயிலிருந்து தப்பி
வாழ்க்கைக்குள்ளேயே விழுந்துவிட்ட சொல்
இரண்டையுமே
கண்ணீரால்தான் துடைத்தெடுக்க முடிகிறது

தோட்டம்

என்ன அழகான தோட்டம்?
எவ்வளவு அழகான பூக்கள்?
எத்தனை அழகான வண்ணத்து பூச்சிகள்?

யாரந்த தோட்டக்காரன்?

ஒவ்வொரு வண்ணத்துப் பூச்சி பிறக்கும்போதும்
ஒவ்வொரு பூக்களைப் புஷ்ப்பிக்க வைக்கும்
அவன் யார்?

அறிதல்

விழுந்தபின் வீசப்பட்டபல்லிற்கு தெரியுமா
தன்னிடம் காட்டப்பட்ட அலட்சியத்தைப் பற்றி?

அறுந்தபின் வீசப்பட்ட செருப்பிற்குத் தெரியுமா
தனக்கு நேர்ந்த அவமதிப்பை பற்றி?

எரிந்தபின் எறியப்பட்ட தீக்குச்சிக்கு தெரியுமா
தனக்கு ஒரு கணத்தில் நேர்ந்த கொடுமை பற்றி?

படிந்த சீவலுக்குப்பின் இடக்கையிலுள்ள முடிக்குத் தெரியுமா
தனக்கு சிகையிநின்று வீழ்ந்த சிறுமை பற்றி?

செழித்தபின் வெட்டி வீசப்பட்ட நகத் துணுக்குகளுக்கு தெரியுமா
தன்னுடைய அழகின் நிலையாமை பற்றி?

கூடழிக்கப்பட்டபின் அலையும் தேனீக்களுக்கு தெரியுமா
தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றி?

கலைந்து விட்ட கனவுகளுக்கு தெரியுமா
தங்களுக்கு நேர்ந்த சேதங்களைப் பற்றி?

அருவி

நம்பிக்கையின் விளிம்பில் பயணித்தவன்
இந்த நீரூற்றின் மேல் விளிம்பில் நின்றபடி
யோசித்தான்

மலையின் வெடிப்பில் பாய்ந்து
விழுந்துகொண்டிருக்கும் அருவி
எழுண்டுகொண்டிருக்கும் திவலை

ஒரு நீரால் எவ்வளவு ஆனந்தமாக
விழ முடிகிறது இவ்வளவு உயரத்திலிருந்து!

கரையின் விளிம்பில் இவ்வளவு ஒட்டில்
முளைத்து வளர்ந்திருக்குமிம் மரத்திற்கு
என்றாவது விழுந்துவிடுவோம்
என்ற பயம் இருக்கிறதா?
அதல பாதாளத்தை எட்டிப்பார்ப்பதுபோல்
தன் கிளைகளை நீட்டி பார்க்கிறது.

கவலைகளை கல்லென உருவகித்து
ஒவ்வொன்றாக நீர்ப்பள்ளத்தாகில் வீசுகிறான்.
ஒரு சிறு கல்லை எடுத்து
பள்ளத்தாக்கில் போடும் அந்த நொடியில்
இக்கரையிலிருந்து கிளம்பி
மறுகரையின்  முனையிலுள்ள மரத்திற்கு
சாவதானமாக பறந்து செல்கிறதொரு காகம்.

கல் தன் ஆழம் கடந்து நீரில் மூழ்கும் நொடியில்
இந்த காகம் மறுமுனயிலுள்ள மரத்தில் சென்று அமர்கிறது.
இரு பயணங்கள் நீள ஆழ பரிமாணங்களில்.

துயரின் கனங்கள்
துயரின் கணங்கள் 
ஒவ்வொரு கல்லாக எடுத்து போட்டுக்கொண்டேயிருக்கிறான்

ஒரு யதேச்சையான நொடியில் பார்க்கிறபோது
ஒரு காகம் மறுமுனைக்கு பறக்கிறது
கற்களெல்லாம் கரையில் மீந்திருக்க

Friday, September 10, 2010

இல்லாது இருத்தல்

உனக்குகந்த பொய்களை
உண்மையின் சாயம் பூசி
உன்னிடம் பேசிப் பேசி
கசந்து போகின்றன என் உண்மைகள்

உன்னுடைய ஓவியங்களை
உண்மையில் இயற்க்கை என்று
உன்னிடம் சொல்லி சொல்லி
இற்றுப் போகின்றன என் இயற்கைகள்

உன்னுடைய குரலை என்றும்
உண்மையில் குழல்தான் என்று
உன்னிடம் சொல்லி சொல்லி
மரத்துப் போகின்றன என் ராகங்கள்

உன்னுடைய இதழை என்றும்
உண்மையில் கனியே என்று
உன்னிடம் சொல்லிச் சொல்லி
உவர்த்துப் போகின்றன என் ருசிகள்

உன்னுடைய கண்களை என்றும்
உண்மையில் கனிவே என்று 
உன்னிடம் சொல்லிச் சொல்லி
பறி போகின்றன என் பார்வைகள்

உனக்கில்லா எல்லாவற்றையும்
உண்மையில் உனதே என்று
உன்னிடம் சொல்லிச் சொல்லி
இழந்து கொண்டிருக்கிறேன் என்னை